×

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக, அதாவது 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இந்த தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடி திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, 1.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக கடந்த ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ரூ.720 முதல் ரூ.10,000 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும்
தமிழ்நாடு அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.720 முதல் அதிகப்பட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியருக்கு சுமார் 720 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

இதேபோல் ரூ.30,000 அடிப்படை சம்பளம் கொண்ட அரசு ஊழியருக்கு கூடுதலாக 1,200 ரூபாய் கிடைக்கும் என்றும், ரூ.90,000 அடிப்படை சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3,600 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

The post தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் appeared first on Dinakaran.

Tags : Nadu Govt ,Chief MLA ,K. Stalin ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu Govt ,Chief MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...